சென்னை: 2021 ல் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்களின் போது மறைந்த சீதாராம் யெச்சூரியுடனான (Sitaram Yechury) நினைவுகளை சு.வெங்கடேசன் பகிர்ந்து கொண்டுள்ளார். 2021ம் ஆண்டு யெச்சூரியின் 34 வயது மகன் ஆஷிஷ் யெச்சூரி (Ashish Yechury) காலமான போது அவர் எழுதிய பதிவை மீண்டும் கடந்த 10ம் தேதி மீள் பதிவாக அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். கொரோனா 2வது அவை நாடு முழுவதும் பரவிய போது அதன் தாக்கத்தால் தனது மகனை யெச்சூரி பறிகொடுத்திருந்தார்.
சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக மேற்குவங்கம் சென்றபோது ஏற்பட்ட சிறுவிபத்தால் யெச்சூரிக்கு முதுக்குத்தண்டில் அடிபட்டது. அதற்காகத் தொடர்ந்து சிகிச்சைபெற்று ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகியது. ஆனால் அகில இந்தியப் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஐந்து மாநில சட்டமன்றப் பணிகளுக்காகத் தொடர்பயணத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்ததைக் குறிப்பிடும் சு.வெங்கடேசன், ஒரு வார ஓய்வுக்குப்பின் மீண்டும் யெச்சூரி பயணத்தைத் தொடர்ந்ததை குறிப்பிடுகிறார்.
உடல் நலம் குன்றிய சூழலிலும் அடுத்தடுத்து யெச்சூரியின் பயணங்கள் நடைபெற்றதை வெங்கடேசன் குறிப்பிடுகிறார். "அடுத்த வாரம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்து, சென்னைக்கு வந்து கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தினூடேயே பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுவந்தார். கூட்டம் முடிந்ததும் டில்லி புறப்பட்டார்."
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமான பயணத்தின் போது யெச்சூரியுடன் சு.வெங்டேசனும் பயணித்திருக்கிறார். விமானத்தினுள் யெச்சூரியால் தனது சூட்கேசை மேலே வைக்க முடியாமல் திணறியதை சு.வெங்கடேசன் நினைவு கூர்கிறார். இரண்டு வரிசை தள்ளி இருந்த தான் உடனே உதவி செய்ததாகவும். சக பயணிகளிடம் பேசி அவரது இருக்கைக்கு அருகே தான் அமர்ந்து பயணித்ததையும் அவர் குறிப்பிடுகிறார்.
"விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய போது அந்த அதிர்வால் முதுகுத்தண்டில் ஏற்படும் வலிதாங்க முடியாமல் மனிதர் துடித்துப் போனார்" என குறிப்பிடும் வெங்கடேசன், அப்பொழுதுதான் அவரது முதுகுத்தண்டில் போடப்பட்டிருந்த கட்டினை தான் தொட்டுப்பார்த்ததாக குறிப்பிடுகிறார். அதற்குப்பின் இரண்டரை மணிநேரப் பயணம் முழுவதும், வலிபொறுக்க முடியாமல் அவரையும் மீறி முனகலோசை வெளிவந்துகொண்டே இருந்தது என வலி மிகுந்த தனது நினைவுகளை குறிப்பிடுகிறார்.
தன்னுடன் இருந்த சிறு தலையணை மற்றும் விமான பணிப்பெண்கள் கொடுத்த போர்வைகளை பின்புறமாக வைத்த போதும், அவை வலியைக் குறைக்க போதுமானதாக இல்லை என வெங்கடேசன் குறிப்பிடுகிறார். தனது அனுபவத்திலிருந்து முதுகு வலியின் தீவிரத்தை குறிப்பிடும் வெங்கடேசன், "முதுகுதண்டு உமிழ்நீரைப்போல வலியை விடாது சுரக்குங்தன்மை கொண்டது. தோழர் செச்சூரியின் அந்த முனகல் ஓசை எனது உடம்புக்குள் வலியாகவே பரவிக்கொண்டிருந்தது. முழுப்பயணத்தையும் நரகவேதனையை அந்த மனிதர் அனுபவித்துக் கொண்டிருந்தார். எதுவும் செய்ய முடியாமல் அருகில் இருந்தேன் நான்" என்கிறார்.
இந்த வலி மிகுந்த பயணத்திற்குப் பின்னர் 15 நாட்கள் கூட கடக்காத நிலையில், திண்டுக்கல் தொகுதி பிரசாரத்தில் சீதாராம் யெச்சூரி வந்திருந்ததை நினைவு கூரும் வெங்கடேசன், அப்போது அவருக்கு உதவியாக மகனி ஆஷிஷ் யெச்சூரி வந்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற தியாகங்கள் தான் தன்னலமற்ற தலைவர்களாக கம்யூனிஸ்டுகளை என்னென்றும் வணங்க வைக்கிறது என சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதையும் குறிப்பிட்டுள்ள சு.வெங்கடேசன், தன்னை வசீகரித்த தலைவரின் கண்களில் நீர் பெருகுவதைக் காணும் துர்பாக்கியம் தனக்கு நேர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.