ஈரோடு: மூலப்பாளையம் அருகில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி காலை இந்த பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு, மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் செய்தியை விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை அளித்ததோடு, காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை, பெற்றோர்களின் உதவியுடன் வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்துள்ள போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 6 மணி நேர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.