சென்னை:ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலை முதல் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஏஜி டி.எம்.எஸ் மெட்ரோ இடையே ரயில்கள் 3.5 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் டிப்போ மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ இடையே 7 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.