திருநெல்வேலி:பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் 166ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, “இந்தியாவில் அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்தோடு சர்வ ஷிக்ஷா அபியான் (SSA) திட்டம் கொண்டுவரப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ஆரம்ப நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்காக இத்திட்ட நிதி வழங்கப்பட்டது. தற்போது ஒன்றிய அரசு அத்திட்டத்தை சமக்ரா சிக்ஷா அபியான் என பெயர் மாற்றியுள்ளது.
2021 முதல் அதற்கான நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதியை வழங்க மறுக்கிறார்கள். இந்தியாவில் கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு அதிக மருத்துவப் பட்டதாரிகள் இருக்கிறார்கள். அதற்கு இடையூறு செய்வது போல் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. புதிய கல்வி கொள்கையில் 2035க்குள் நாட்டில் 50 சதவீதம் பேரை பட்டதாரிகளாக ஆக்குவோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் 51 சதவீதம் பேர் பட்டதாரி ஆகிவிட்டார்கள். இந்தியாவிலையே தமிழகத்தில் தான் அதிகமாக 78 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் 11 ஆயிரத்து 500 மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், புதிய கல்வி கொள்கை வந்தால் 7 ஆயிரத்து 500 பேர் தான் படிக்க முடியும். கலை கல்லூரிக்கும் நுழைவு தேர்வு கொண்டு வருவோம் என்று கூறுகின்றனர். அது போன்ற நிலை வந்தால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டி இருக்கும்.