மதுரை:கடந்த நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளி கூட்ட நெரிசலைச் சமாளிக்கச் சென்னை - மதுரை - தாம்பரம் வரை இயக்கப்பட்ட மெமு ரயில் பயணிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில், மதுரையை மையமாகக் கொண்டு அதிக மெமு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில் ஆர்வலரும் அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து என்ற இந்திய அளவிலான நுகர்வோர் அமைப்பின் வல்லுநர் குழு உறுப்பினருமான அருண்பாண்டியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
மெமு ரயில்:"மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (Main Line Electric Multiple Unit) என்பதன் சுருக்கமே 'மெமு ரயில்' (MEMU) என்றழைக்கப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டே 'மெமு' ரயில்கள் உருவாக்கப்பட்டன.
ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu) மின்சார ரயில்கள் அதிகபட்சம் 90 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. மின்சார ரயில்களின் வழக்கமான வேகத்தைவிட 10 கி.மீ. அதிகபட்சமாக மெமு ரயில்கள் இயக்கப்படும். இந்த தீபாவளிக்கு முதன்முறையாக சென்னையிலிருந்து மதுரைக்கு மெமு ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலைப் பொறுத்தவரை உட்காருவதற்கு மட்டுமன்றி நின்று செல்வதற்குத் தேவையான இடவசதியோடு இருக்கும். முன்பகுதியில் என்ஜின் அமைந்துள்ள ட்ராக்சன் கோச் தவிர, அடுத்தடுத்து ட்ரெயிலர் கோச் இருக்கும். இவை ஒவ்வொன்றிலும் சுமார் 100 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். அனைத்து பெட்டிகளிலும் உள்ளேயே நடந்து செல்லலாம்.
கடந்த தீபாவளி விடுமுறைக்கு இயக்கப்பட்ட மெமு ரயிலில் சராசரியாக 1500 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 30 பேருந்துகளுக்கு சமமாகும். இந்த மெமு ரயிலை மதுரை வரை நீட்டிப்பதற்காகப் பெரிதும் முயற்சி செய்த மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி.
இதுபோன்ற மெமு ரயில்களின் தேவை மதுரையைப் பொறுத்தவரை அதிகம் உண்டு. தென் தமிழகத்தின் நுழைவாயிலாக மதுரை இருக்கின்ற காரணத்தால், குறுகிய தூரம் என்ற அடிப்படையில், மதுரையில் தனியாக மெமு ஷெட் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து தொடர்ந்து தனது கோரிக்கையாக வலியுறுத்தி வருகிறது" என்றார்.
செலவு குறைவு:தொடர்ந்து பேசிய அவர், "மெமு ரயில்களைப் பொறுத்தவரை பராமரிப்புச் செலவு குறைவு. ரயிலின் இரண்டு பக்கமும் என்ஜின் கோச்சுகள் இருக்கின்ற காரணத்தால், அதனைக் கழட்டி மீண்டும் மாட்டுகின்ற நேரமும் குறைகிறது. பயணிகளின் எதிர்கால தேவையை அடிப்படையாகக் கொண்டே மெமு ரயில்கள். இதற்கு முன்பாக மதுரைக் கோட்டத்தில் மெமு ரயில்கள் இயக்கப்பட்டதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோவையிலிருந்து திண்டுக்கல் வரை மெமு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.
டெமு ரயில்:ஆனால், 'டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்'(Diesel Electric Multiple Unit) எனப்படும் டெமு ரயில் (DEMU), திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிமனை திருச்சியில் உள்ளது. திருச்சியிலிருந்து காரைக்கால், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வரை அது இயக்கப்படுகிறது.
இது மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்டு இயக்கப்படுகின்ற டெமு ரயில் ஆகும். கடந்த 2014 பொங்கல், தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலைச் சமாளிக்க மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக எழும்பூரிலிருந்து சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக திருநெல்வேலி வரை 725 கி.மீ. தூரம் டெமு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இதுவும் சாதனைதான்.
டெமு திருச்சி ரயில்வேயில் ஏறக்குறைய அனைத்து தடங்களும் தற்போது மின்மயமாகிவிட்டதால், டெமு ஷெட், மெமு ஷெட் ஆக மாற்றப்பட்டு வருகிறது. அதுபோன்று மதுரை-திருநெல்வேலி, மதுரை-தூத்துக்குடி, மதுரை-பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு இயக்கும் வகையில் மெமு ஷெட் உருவாக்கப்பட வேண்டும். பயணிகளுக்கான கட்டணமும் மெமு ரயில்களில் மிகவும் குறைவு. இதற்காக கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி எங்கள் அமைப்பின் சார்பாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் " என்று அருண்பாண்டியன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.