சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த 26ம் தேதி தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கொரு சாக்கு மூட்டை கிடந்து, அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
உடனே இதுகுறித்து தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அந்த சாக்கு முட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.
மனித எலும்பை கைப்பற்றிய காவல் துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, சாக்கு மூட்டையில் கிடந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், போலீசார் கைப்பற்றிய எலும்புகள், கடந்த மே 27ம் தேதி காணாமல் போன தொட்டாபுரம் கிராத்தைச் சேர்ந்த குமாருடையது என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து குமாரை பற்றி தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் தொட்டாபுரம் நாகமல்லு என்பவர் தலமலை கிராம நிர்வாக அலுவலரிடம் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். பின்னர் அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதே போல் முத்துமணி, மாதேவன் என இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாகமல்லு அளித்த வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
நாகமல்லு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது; "நானும் என் அம்மா முத்துமணியும் தொட்டாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறோம். எனது தந்தை ராமசாமி மதுக்கடையில் வேலை பார்த்து வருகிறார். எனது தம்பி சங்கர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.