திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்தவர் மணி - பேபி அம்மாள் தம்பதி. இவர்களுக்கு ரவிக்குமார், ராஜ்குமார், செல்வி, பழனி பாரதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். மேலும், இவர்களுக்குச் சொந்தமாக சுமார் 36 சென்ட் நிலம் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்த மூர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் மூலம், அந்த இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டதாக கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் வசிக்கும் பழனி அவரது குடும்பத்தினருடன் புத்துக்கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அதையடுத்து இவர்களது சொந்த நிலத்திற்குச் சென்ற போது, அங்கு சம்பந்த மூர்த்திக்கும், பழனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது இரு குடும்பத்தினருக்கும் இடையேயான வாக்குவாதமாக மாறியுள்ளது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பலூர் போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால், இந்த வாக்குவாதத்தின் போது கிராம மக்கள் மற்றும் போலீசார் முன்னிலையில், பழனியை சம்பந்த மூர்த்தி அவதூறாகப் பேசி ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது தந்தையை திட்டியதாக பழனியின் மகன் ஜெயபிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில், எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், ஜெயபிரகாஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினரிடம் ஜெயபிரகாஷின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.