திருநெல்வேலி:தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்ற பெருமையை கொண்ட தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாபநாசத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. நீண்ட நெடும் பாரம்பரியம் கொண்ட இந்த தாமிரபரணி ஆற்றைச் சார்ந்து தான் தமிழகத்தின் முதுபெரும் நாகரீகமான பொருநை நாகரீகம் தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன.
பஞ்சமின்றி பாய்ந்தோடும் கழிவுநீர்:இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தாமிரபரணி நதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாகத் தாமிரபரணி நதியை நம்பி சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீர் மற்றும் மாசினால் சமீபகாலமாகத் தனது பொலிவையும் பாரம்பரியத்தையும் இழந்து வருகிறது. பாபநாசத்தில் தொடங்கி புன்னகாயல் வரை வீட்டு கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், கால்நடை கழிவுகள் என பல வகைகளில் கழிவுநீர் தாமிரபரணி நதியில் கலப்பதால் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறி வருகிறது.
தாமிரபரணி நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை?குறிப்பாக மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தாமிரபரணி நதி குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரியவந்தது. இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. குறிப்பாக திருநெல்வேலி மாநகர பகுதியில் மேல கருங்குளத்தில் தொடங்கி அருகன்குளம் வரை மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்து பூந்துறை, கொக்கரகுளம் கருப்பந்துறை மேலநத்தம் உடையார்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மாநகராட்சி சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றின் கரையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அவைகள் பராமரிப்பில்லாமல் தற்போது வரை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது என்பது தொடர்கதையாகவே உள்ளது.