சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் (செப்.09) நள்ளிரவு வந்த துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் தீபக் (30) என்பவரும் அவருடன் சேர்ந்து மற்றோறு ஒப்பந்த ஊழியரும் கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை டிராலி டைப் இயந்திரத்தில் வைத்து தள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் நிறுத்தி விசாரித்துள்ளனர். அதோடு, கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளையும் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த கருவிகளுக்குள் 3 சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவைகளை அதிகாரிகள் எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதற்குள் தங்கப் பசைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தமாக மூன்று பார்சல்களிலும் 2.2 கிலோ தங்க பசை இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி என்றும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உட்பட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.