சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டு காலமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும், அவரை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைப்பதற்கு முன்பு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, தொடர்ந்து அவர் சிறையில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல், சிறையிலேயே அவருக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மணுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று சிறையில் இருந்தபோது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவிக்கும் அறிவுரையின் அடிப்படையில் மீண்டும் அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கு; செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!