சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
இது குறித்து அளித்த புகாரின் பெயரில் செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை மிரட்டல் கடிதத்தில் சதீஷ் என்ற நபர் இந்த கடிதத்தை அனுப்பியதாக குறிப்பிட்டு இருந்தது. மேலும், கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி குழந்தை வசித்து வரும் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து சதீஷை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் இந்த கடிதத்தை அனுப்பவில்லை என்பது தெரிய வந்தது.