சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கேரளா நிலச்சரிவில் பல உயிர்கள் இழந்துள்ளதை தொடர்ந்து, 300 நபர்களை காணவில்லை. அப்பகுதியில் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு மீட்புப் பணியை மிகவும் விரைந்து முடுக்கிவிட வேண்டும். தேசிய பேரிடர் பாதுகாப்புப் பணியினை அதிகப்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகள் எவ்வளவு கொடுத்தாலும் அது போதியதாக இருக்காது. இருந்தாலும் கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக அரசு சார்பாக 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார், அது வரவேற்கத்தக்கது. மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வயநாடு மக்களுக்கு உதவுவதற்கு வழங்க உள்ளோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடலூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் வயநாடு பகுதிக்கு மீட்புப் பணியில் உதவுவதற்கு விரைந்து செல்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொழிலதிபர்களுக்கு இந்த பேரிடரில் நேசக்கரம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்" என்று தெரிவித்தார்.