தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக முன்னோடி ஈ.வே.ராமசாமி இல்லை.. ராமர் சாமி தான்..” அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு சீமான் கேள்வி! - Seeman questions minister Ragupathy - SEEMAN QUESTIONS MINISTER RAGUPATHY

Seeman Questions Minister Regupathy: திராவிட மாடலின் முன்னோடி ராமர் என சமீபத்தில் நடந்த கம்பன் கழக விழாவில் அமைச்சர் ரகுபதி கூறிய நிலையில், திமுக மாடலின் முன்னோடி ஈ.வே.ராமசாமி இல்லை ராமர் சாமிதான் போல என சீமான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ரகுபதி,ராமர் சிலை, சீமான்
அமைச்சர் ரகுபதி, ராமர் சிலை, சீமான் (Credits- ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 6:40 PM IST

சென்னை:கடந்த ஜூலை 22ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி, ராமாயணம் குறித்தும், அதில் உள்ள கருத்துக்கள் பற்றியும் பேசினார். அப்போது அவர், அனைவரும் ராமாயணைத்தை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் திராவிட ஆட்சியின்முன்னோடியே ராமர் தான் என்றார்.

இந்தக் கூற்று அரசியல் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தற்போது இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்று தெரியவில்லை, 'திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்' என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுவது வியப்பை அளிக்கிறது.

இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஈ.வே.ராமசாமி வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு இல்லை 'நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்' என்று திமுக அரசின் மிக முக்கிய அமைச்சக பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதை திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்றுக் கொள்கிறது என்பதும் உறுதியாகிறது.

ராமரை கடவுளாக வணங்கும் மக்கள், இராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை சொர்க்கத்தில் வாழ்வதைப் போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர்.

அப்படி ஒரு ஆட்சிதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புளியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம்தான் ராமரின் ஆட்சியா அல்லது சம்பூகனைக் கொன்றது போல் திமுக ஆட்சியிலும் ஈவு இரக்கமற்ற படுகொலைகள் நடைபெறுதால் இது ராமரின் ஆட்சியா?

மேலும் "இராமர் எங்களின் முன்னோடி" என்ற பாஜகவின் வர்ணாசிரம குரலை அப்படியே திமுகவும் ஒலிக்கத் தொடங்கியுள்ளதன் மூலம் பாஜகவின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா திமுக? திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? இத்தனை ஆண்டுகாலம் திமுக கூறிவந்த சமூகநீதி என்பது சனாதனம் தானா? அமைச்சரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் திமுகவில் யாரும் இதுவரை அதனை மறுக்காதது ஏன்?

இவ்வாறு அமைச்சர் பேசியது திராவிட மாடல் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்றால் அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பாஜகவை திமுக கடுமையாக எதிர்க்கும் முறை இதுதானா? திமுக அரசின் சட்ட அமைச்சர் கூறிய கருத்தை கண்டித்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலியன் பூங்குன்றன் கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில் திமுக மூத்த தலைவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்?

ஏன் பகுத்தறிவு, முற்போக்கு, சமத்துவம், சமூகநீதி என்று நீட்டி முழக்கும் திமுகவின் ஊடக ஊதுகுழல்கள், வாடகை வாய்கள் அமைச்சர் ரகுபதியின் "ராமர் எங்கள் முன்னோடி" என்ற கருத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதி காப்பது ஏன்? காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டதா? அல்லது நாக்கு அசைய முடியாமல் செயலிழந்து விட்டதா?

இதற்கு பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு? ஆகவே, தமிழ்நாடு சட்ட அமைச்சரின் "திராவிட ராமர் ஆட்சி" பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் போக்க தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நாட்டு மக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஸ்டாலினிடம் கேட்பது அவமானமாக உள்ளது"

ABOUT THE AUTHOR

...view details