கன்னியாகுமரி:நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) கன்னியாகுமரிக்கு வர உள்ளார். அங்குள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார். விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதை அடுத்து நாளை முதல் மூன்று நாட்களும் சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு மற்றும் ஒத்திகை (Credits - ETV Bharat Tamil Nadu) இறுதி கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகிறார். இதனால், டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயணம்: டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார்.
பின்னர், கார் மூலம் அருகில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகு மூலம் செல்கிறார். அன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
3 நாட்கள் தியானத்திற்ககு பின்னர் ஜூன் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை கரை திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, 3.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 4.05 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் செல்ல உள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு, இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், திருவனந்தபுரத்தில் இருந்து வந்து நேற்று பாதுகாப்பு ஒத்திகை செய்தது. மேலும், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு வந்து இங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி படகு தளம், பிரதமர் பயணிக்கும் படகு உள்ளிட்டவர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்களும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், விவேகானந்தர் கேந்திர நிர்வாக அதிகாரி, கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் நவீன், வருவாய்த்துறை அதிகாரிகள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி, பொதுப்பணித்துறை அதிகாரி, நெடுஞ்சாலை துறை, சுகாதாரத் துறை, சுற்றுலாத்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த முறை கேதார்நாத் பயணம்:கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்த பின்பு பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். அதேபோல், தற்போது மக்களவைத் தேர்தல் இறுதி கட்டப் பிரச்சாரத்தை முடித்து கொண்டு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழகத்தில் பிரதமரின் தியானம் உறுதி.. வெளியான பயண விவரம்! - Modi Kanyakumari Schedule