சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது நிதி அலுவலர் பொறுப்பு வகிக்க பேராசிரியர்கள் முன் வராதது புதிய சர்ச்சையை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக பெரியார் பல்கலைகழக தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஜெகநாதனின் நிதி மோசடி முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காத அரசு நியமித்த நிதி அலுவலர் பணியிட மாற்றத்தில் சென்றார்.
இந்நிலையில், பல்கலைக்கழக நிதி அலுவலர் பொறுப்பை பதிவாளர், தேர்வாணையர் உட்பட யாரும் ஏற்க முன் வராத காரணத்தால் பல்கலைக்கழக நிர்வாகப் பணிகள் முடங்கி உள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியாளர், துணைவேந்தரின் அழுத்தம் தாங்காமல் பணியிட மாற்றம் பெற்ற நிலையில், அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட முனைவர் கிருஷ்ணகுமார் தனது மனைவியின் உடல் நலத்தை காரணம் காட்டி விடுப்பில் சென்று விட்டார். அதனால் கணிதவியல் துறை பேராசிரியர் பிரகாஷ் பொறுப்பு நிதியாளராக துணைவேந்தரால் நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவரும் தனக்கு நிதி அலுவலர் பொறுப்பு வேண்டாம் என்று கூறி விடுப்பில் சென்றுவிட்டார். இதனால் நிதி பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. இதுபற்றி பேராசிரியர்கள் கூறுகையில், முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவிற்கு இம்மாதம் ஒய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யக் கூறியது.
ஆனால், துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யாமல் பணி ஓய்வு வழங்கி, அவருக்கு ஓய்வு ஊதியம் வழங்கி உள்ளார். இதில் நிதி அலுவலர் கையெழுத்திட்டால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால், யாரும் நிதி அலுவலர் பொறுப்பு ஏற்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பல்கலைக்கழக நிதி அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.