சேலம்: சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி இன்று(ஜன.30) திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,"அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாகப் பொதுமக்களுக்குச் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம், சொர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் பெற வருகைதந்த பொதுமக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்துக் கேட்டறியப்பட்டது.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,258 முழுநேர கடைகள், 457 பகுதி நேரம் கடைகள் என மொத்தம் 1,715 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், AAY அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள், காவலர் அட்டைகள், வனக் காவலர் அட்டைகள் உள்ளிட்ட 10,99,258 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள 10,99,258 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 15,000 மெ.டன் அரிசியும், 1,345 மெ.டன் சர்க்கரையும், 290 மெ.டன் கோதுமையும், 1.20 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய், 870 மெ.டன் துவரம் பருப்பு, 930 மெ.டன் பாமாயில் மற்றும் 2,615 மெ.டன் AAY அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்குத் தேவையாக அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை அனுப்பிடத் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.