கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி பேருந்துகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதங்களில் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளி பேருந்துகளிலும், முறையாக அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவா? என்பது குறித்து ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, பள்ளி பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், முதலுதவி பெட்டிகள், பயோமெட்ரிக் ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவைகள் முறையாக இயங்குகின்றனவா? என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பேருந்துகளில் மாணவ, மாணவிகள் உட்காரும் இருக்கைகள், வாகனத்தில் பிரேக்குகள் மற்றும் அவசரகால வழி போன்றவைகள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.