சென்னை: அமெரிக்கா சிகாகோவில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன், உற்பத்தி அலகு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவ 2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ரூபாய் 400 கோடிக்கு 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
அதேபோல, சிகாகோ நகரில் அஷ்யூரன்ட், ஈட்டன் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து, ஈட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் 200 கோடிக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சென்னையில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஏ.ஐ. ஆய்வகம் அமைப்பதற்காக பிரபல நிறுவனமான கூகுளிடமும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிகாகோவில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் 2,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அதுகுறித்து அவர் தமது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கையில், ''டிரில்லியன்ட் நிறுவனத்துடன் உற்பத்தி அலகு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை தமிழ்நாட்டில் நிறுவ 2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு, ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி.