சேலம்:தெற்கு ரயில்வேயில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் ரயில் சேவைகளை இயக்குவதில், சேலம் ரயில்வே கோட்டம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 145 பார்சல் ரயில் சேவைகளை இயக்கி, 3.19 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அதே போன்று, சாலை மார்க்கமாக சரக்குப் பொருள்களை எடுத்துச் செல்வதை ஒப்பிடும்போது, ரயில்களில் வேகமாக எடுத்துச் செல்ல முடிகிறது.
குறிப்பாக முட்டை, பால் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை அசாம் மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளுக்கு மூன்று நாட்களில் கொண்டு சேர்க்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்டம், கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டங்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 959 குவிண்டால் பார்சலைக் கையாண்டு, 14.08 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 365 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் பிரத்யேக பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், மேட்டுப்பாளையம், போத்தனூர், கோயம்புத்தூர் வடக்கு, வாஞ்சிபாளையம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய ரயில் நிலையங்களில் பார்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.