சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லது அலுவலர்களின் பணிப் பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.