திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கேபிகே ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. ஜெயக்குமார் மரண வழக்கில் கடிதங்கள் உட்பட சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தும்கூட ஜெயகுமாருக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. அந்த கடிதங்களில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. எனினும் இவ்வழக்கை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நெல்லை எஸ்பி சிலம்பரசனே ஜெயக்குமார் வீட்டு பகுதியில் முகாமிட்டு ஜெயக்குமாரின் மனைவி, இரு மகன்கள், மகள், மருமகன் என குடும்பதினர் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். ஆனாலும், ஜெயக்குமார் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை.
பெண்ணுடன் தொடர்பு:தொழில் விவகாரம், அரசியல் விவகாரம், பெண் விவகாரம் என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் பலனளிக்கவில்லை. குறிப்பாக, ஜெயக்குமாருக்கு திசையன்விளை அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிய வந்தது. அந்தப் பெண்ணையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் ' 'ஜெயகுமாருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான். ஆனால் அவரது கொலை பற்றி எதுவும் தெரியாது'' என கூறிவிட்டார்.
பாத்திரம் கழுவும் பிரஷ்: ஆனால், ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கு முகாந்திரம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டும், வயிற்றில் கடப்பாக்கல் கட்டப்பட்டும் எரிக்கப்பட்டிருந்தது. மேலும், வாயில் பாத்திரம் கழுவும் பிரஷ் திணிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், உடல் கிடந்த இடத்தில் மீட்கப்பட்ட தடயங்கள் அனைத்தும் உள்ளுர் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகு மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து வந்த சிறப்பு தடய அறிவியல் குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.