தென்காசி:தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவைச் சார்ந்த ராணி ஸ்ரீகுமார், அதிமுக கூட்டணியை சார்ந்த கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணியை சார்ந்த ஜான் பாண்டியன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இசை மதிவாணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டியராஜா மற்றும் செயலாளர் ஜெகன் ஆகியோர் விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது, "தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அடங்கும்.
இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக ஏற்று அதனை நிறைவேற்றி தரவேண்டும். குறிப்பாக தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் நீர் ஏற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசி ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுதல்.