புதுக்கோட்டை:கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி சவுரியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி மாலதி, இவர்கள் ஆடு, மாடுகள் மேய்த்தும், அன்றாட கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இருக்க இடம் கூட இன்றி, மாட்டு கொட்டகையில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக, மாலதி தனது கணவரை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டாக உள்ள தஞ்சாவூர் மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கடந்த ஓராண்டிற்கு முன்பு மலேசியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும், மாதம் 30 ஆயிரத்திற்கும் மேல் ஊதியம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி, நம்ப வைத்து மாலதியின் கணவர் சதீஷ்குமாரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மலேசியாவில் கூலி வேலை செய்து வந்த சதீஷ்குமாருக்கு கடந்த ஆறு மாதங்களாகவே சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தான் வேலை செய்து வந்த நிறுவனத்திடம் சதீஷ்குமார் கேட்ட பொழுது, அதற்கு நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய சதீஷ்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.