சென்னை:தானா சேர்ந்த கூட்டம், பத்து தல, தங்கலான், மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்து, முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா. இவரது மனைவி மேகா. இவர்கள் தி.நகர் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஞானவேல் ராஜா மனைவியின் மேகாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது, மேகாவிற்கு அதிகப்படியான பரிசுப் பொருட்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதில், இரண்டு பரிசுப் பொருட்களில் வந்த தங்க நெக்லஸ் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஞானவேல் ராஜா வீட்டில் 4 வருடமாக பணிபுரிந்து வந்த பணிப்பெண் லட்சுமி என்பவரிடம் விசாரித்துள்ளார். அவர் சரிவர பதில் சொல்லாமல் இருந்து வந்த நிலையில், 14ஆம் தேதியிலிருந்து அவர் வேலைக்கு வராமல் நின்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஞானவேல் ராஜா, தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, நேற்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.