திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் அகாடமியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலரை அகாடமி உரிமையாளர் பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிமையாளர் மீது மேலப்பாளையம் போலீசார் சிறார் பாதுகாப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் தனியார் நீட் அகாடமிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவிகள் தங்கி உள்ள விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் குழுவினரும் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது விடுதிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தனியார் நீட் அகாடமி உரிமையாளர் கேரளாவுக்கு தப்பி சென்ற நிலையில், அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது. இந்த சூழலில் கட்டட உரிமையாளர் விடுதியை காலி செய்ய அகாடமி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.