விருதுநகர்:அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடுகின்றார். கடந்த 10 நாட்களாக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி உடன் அவர் தொகுதி முழுவதிலும் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார்.
இந்நிலையில், சிவகாசி பகுதியில் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கேட்டு பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியவர், “ இந்த தொகுதியில் கொட்டும் முரசு சின்னத்தில் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றார். அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நீங்கள் உதவி செய்ய வேண்டும். விஜய பிரபாகரன் வேறு யாருமில்லை இந்த மண்ணின் மைந்தன்.
உங்கள் அண்ணன் மகன். உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.
கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றேன். 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி பிரதமராக வந்தாலும் வியப்பு இல்லை. இந்த தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார்.ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் 30 லட்சம் ரூபாய் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார். தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள் உருவாக்கப்படும். இலவச நீட் கோச்சிங் சென்டர் உருவாக்கப்படும்.