சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவையொட்டி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி, ‘கேப்டன் இல்லம்’ என்ற பெயர் பலகையை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, இலவச மருத்துவ முகாம், டிஜிட்டல் வாயிலாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பிரேமலதா விஜய்காந்த் கூறியாதாவது, “ தேமுதிகவின் 20ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். தேமுதிக தலைமை அலுவலகம் இன்று முதல் கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:பன் + க்ரீம் வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்னபூர்ணா நிர்வாகம்!
அன்னபூர்ணா விவகாரம்:சிறு தொழிலாக இருந்தாலும், பெரிய தொழிலாக இருந்தாலும் ஜிஎஸ்டி அனைத்தையும் கேள்விக்குறியாகி உள்ளது. அனைவருடைய வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அன்னபூர்ணா உரிமையாளர் யதார்த்தமாக, நகைச்சுவையாகவும் கேள்வியைக் கேட்டார். இதில் எந்த உள்நோக்கம் இருப்பதாகவோ அல்லது அவமதிக்கும் நோக்கில் பேசியதாகவோ எனக்கு தெரியவில்லை. அவர் பேசியது ஊடகங்கள் பெரிதாக்கியதால் தானாக முன்வந்து நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்: முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்துள்ள நிலையில், அவரது வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மகா விஷ்ணு விவகாரம்:மகா விஷ்ணுவின் விவகாரம் பூதாகரமானது. பள்ளியில் சென்று சொற்பொழிவாற்ற இவருக்கு யார் அனுமதி அளித்தது? அதற்கு இதுவரை பதில் இல்லை. அனுமதிக்காமல் ஒருவர் உள்ளே வர முடியுமா? இந்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் ஏரியாவிற்கு வந்து இப்படி பேசியுள்ளாய், உன்னை என்ன பன்ற பாரு என்று கூறுகிறார். இதற்கு ஏன் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.