தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிபிஜி சங்கர் முதல் ஆம்ஸ்ட்ராங் வரை.. இரண்டாண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய அரசியல் கொலைகள்! - tamil nadu politicians murders

Tamil Nadu political leaders Murders: தமிழகத்தில் கடந்த இரண்டே ஆண்டுகளில் நான்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இரு வழக்குகளில் கொலையாளிகள் தாமாகவே முன்வந்து சரண் அடைந்துள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 4:52 PM IST

தமிழகத்தில் கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்கள்
தமிழகத்தில் கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் எத்தனையோ கோரமான கொலைச் சம்பவங்கள் நடந்திருந்தாலும் அரசியல் சார்ந்த கொலைகள் எப்போதும் போல பொதுமக்களை பதட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. சாமானியர்களுக்கு எதிரான குற்றங்களைக் காட்டிலும், பொதுவாழ்க்கையில் உள்ளவர்களின் படுகொலைகள் அரசு மற்றும் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சோதித்து பார்த்துவிடும்.

குற்றங்கள் நேர்ந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் காவல்துறையில் உளவுத்துறை போன்ற பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையெல்லாம் கடந்து அண்மையில் நடந்த பல கொலைகள் திமுக ஆட்சியில் கருப்பு புள்ளியாகத்தான் இருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரலில் இருந்து தற்போது வரை மட்டுமே தமிழகத்தில் மூன்று முக்கிய அரசியல் தலைகளை கூலிப்படை கொடூரமாக கொன்று சாய்த்துள்ளது. இதில் ஒரு சம்பவம் இன்னும் மர்ம மரணமாகவே நீடித்து வருகிறது.

பிபிஜிடி சங்கர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சியைச் சேர்ந்த பி.பி.ஜி சங்கர் பாஜகவின் மாநில பட்டியலின பிரிவில் பொருளாளராக இருந்து வந்தார். இவர் மீது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி என 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இவரது சகோதரர் பி.பி.ஜி. குமரன் காஞ்சிபுரத்தில் செல்வாக்குமிக்க ரவுடியாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பி.பி.ஜி. குமரன் கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து, அண்ணனின் தொழில்களை பார்த்துக்கொண்டு பாஜகவின் நிர்வாகியாகவும் பொறுப்புகளை கவனித்து வந்தார் பிபிஜி சங்கர். மேலும், தொழில் ரீதியாகவும், அண்ணனின் கொலை தொடர்பாகவும் பிபிஜி சங்கருக்கு உள்ளூர் ரவுடிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி பிபிஜி சங்கர் சென்னைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு தனது காரில் வந்து கொண்டிருந்தபோது, நசரத்பேட்டை சிக்னல் அருகே திடீரென காரை வழிமறித்த மர்ம கும்பல், கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நிலைகுலைந்த கார் அப்படியே நிற்க, இறங்கி தப்ப முயன்ற சங்கரை அந்த கும்பல் துரத்தி வெறித்தனமாக வெட்டியது. இதில் சங்கரின் மூளை வெளியே வந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை பரபரப்பான பகுதியில் சிக்னல் அருகே மக்களின் கண்முன்னே நடந்தது. இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தபோது, கொலையில் தொடர்புடைய 9 பேர் தாமாக வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், அந்த 9 பேரும் 20 முதல் 25 வயதுடையவர்கள் என்பது இந்த சம்பவத்தின் கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.

நெல்லை ஜெயக்குமார்: இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமாரின் மரணம் கிட்டத்தட்ட கொலை என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் சந்தேக மரணமாகவே நீடிக்கிறது. மே 4ஆம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். முன்னதாக இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் துப்பு கிடைக்கவில்லை. பின்னர், சிபிசிஐடி விசாரணைக்கு மாறி தற்போது வரை விசாரணை நீடிக்கிறது.

குறிப்பாக, ஜெயக்குமார் வழக்கில் வெளியான வாக்குமூலக் கடிதத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முதல் சபாநாயகர் அப்பாவு பெயர் வரை இடம் பெற்றிருந்தது. அதன்படி, கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், டிஎன்ஏ சோதனை, சைபர் க்ரைம் சோதனை, தடய அறிவியல் சோதனை, கைரேகை நிபுணர் குழு சோதனை என பலகட்ட சோதனை நடத்தியும் ஜெயக்குமார் வழக்கில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என காவல்துறை தெரிவித்துவிட்டது. தற்போது சிபிசிஐடி இந்த வழக்கை மும்முரமாக விசாரணை நடத்தி வருகிறது.

சேலம் சண்முகம் கொலை:சேலத்தில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த கொலை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவைச் சேர்ந்த சண்முகம் அதிமுக பகுதி செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், ஜூலை 3ஆம் தேதி இரவு 12 மணி அளவில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றபோது பின்தொடர்ந்த கூலிப்படை சண்முகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

இதில், சண்முகத்தின் தலைப்பகுதி முற்றிலுமாக சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பெண் கவுன்சிலர் உட்பட நான்கு பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், கஞ்சா விற்பனையில் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் சதீஷ் ஈடுபட்டு வந்ததாகவும், அதை சண்முகம் போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரத்தில் கூலிப்படை மூலம் சண்முகத்தை சதீஷ் கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: சேலத்தில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக நிர்வாகி படுகொலை சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயாமல் இருக்கும் நிலையில்தான், சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து மாநகரை உலுக்கியுள்ளது.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு எட்டு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 8 பேருமே வெளியூர் ஆட்கள்தான். அப்படியிருக்க, நோட்டம் பார்த்து திட்டம் தீட்டி இப்பெரும் படுகொலையை ஆம்ஸ்ட்ராங்கின் சொந்த ஊரிலேயே, அதுவும் அவரது வீட்டருகே நிகழ்த்தியுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது ஆட்டோ ஓட்டுநர் திருமலை என்பது தெரிய வந்துள்ளது.

பழைய குற்றவாளியான திருமலை, ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே உள்ள பள்ளி அருகில் தான் எப்போதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் அவர் கட்டி வரும் வீட்டை பார்க்க வந்தபோது, அவரோடு குறைந்த ஆட்கள் இருந்ததால் உடனே திருமலை இது குறித்து தகவலை ஆற்காடு பாலுவிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகே நேற்றிரவு உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொலை செய்துள்ளது.

காவல் ஆணையர் சந்தீப்:மேலும், இக்கொலை வழக்கு குறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவிக்கையில், ''ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரசியலில் சில நேரங்களில் பிரச்னை இருந்தது உண்மைதான். ஆனால், இந்த கொலை அரசியல் காரணங்களுக்காக நடந்திருக்க வாய்ப்பு குறைவுதான். வேறு சில சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம்.

ஆற்காடு பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும் போது என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இன்னும் பல கோணங்களில் விசாரணை நடக்கிறது, மேலும், சில குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணையின் முடிவில் தான் அவர் கொலைக்கான காரணம் தெரியும்'' என்றார்.

இதையும் படிங்க:யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? - கவுன்சிலர் முதல் பி.எஸ்.பி மாநிலத் தலைவர் வரை கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details