தேனி:தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். மேலும் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நுழைவாயில், மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தங்கதமிழ்செல்வன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, "இந்த கல்லூரி கருணாநிதியால் துவங்கப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அன்று 50ஆம் ஆண்டு பொன்விழா காண்பது மகிழ்ச்சியான நிகழ்வாகும். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழி ஆட்சியில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இவர்கள் காலகட்டத்தில்தான் படித்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது" என்றார்.
இதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், நேற்று ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரும் கலந்து கொண்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படாத மாணவர்களுக்காக தமிழக அரசு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எனவே மாணவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினேன்” என்றார்.