சென்னை:பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 நபர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடத்தை ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, அருள், வினோத், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், விஜய், அப்பு, சிவசக்தி, கோகுல் ஆகிய 10 பேரிடமும் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஐந்து நாட்கள் போலீஸ் காவல் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்த நிலையில், காவலில் எடுக்கப்பட்ட 11 பேரில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டதையடுத்து, மீதமுள்ள 10 பேரில் 9 பேரை தனி வாகனத்தில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் உறவினர் அருள் என்பவரை தனி வாகனத்தில் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
பின்னர், பரிசோதனை முடிவு பெற்ற நிலையில், மருத்துவமனையில் இருந்து 10 பேரையும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவல் இன்று முடிவடைவதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு!