ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் விளாமுண்டி வனசரகமும் உள்ளது. முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இணையும் இடத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் பல வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதும் வழக்கம். இது மட்டுமின்றி தீத்தடுப்பு, குற்றத்தடுப்பு பணிகளிலும் ஈடுபடுவார்கள்.
இந்த விளாமுண்டி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தவர் தங்கராஜ் (வயது 49). நேற்று இவர், சிங்கமலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் இருந்த ஒற்றை காட்டு யானை தங்கராஜை துரத்தியுள்ளது. யானையைக் கண்டு தப்பி ஓடிய தங்கராஜை, யானை துரத்தி பிடித்து தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்ததாகக் கூறப்படுகிறது. அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை விரட்டினர். அதைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த தங்கராஜை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.