தருமபுரி: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தால் தேர்தல் களம் சற்றே சூடு பிடித்துள்ளது.
வாக்கு சேகரிக்கும் பணி:குறிப்பாக வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி வேல் பால் டிப்போ, டேக்கிஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
திமுகவும் கூட்டணியிலிருந்தது: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் சரி, முன்னாள் முதலமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியும் பாட்டாளி மக்கள் கட்சி திடீரென பாஜக கூட்டணியில் சென்றது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 1998-இல் வாஜ்பாய் காலத்தில் அவரது தலைமையில் ஆறு ஆண்டுக் காலம் கூட்டணியிலிருந்தோம். அப்போது அதிமுகவும், திமுகவும் கூட்டணியிலிருந்தது.
கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்:2014-இல் பாஜக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணியிலிருந்தோம். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி. இப்போது அதிமுக வெளியேறி இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம். இதில் என்ன ஆச்சரியம். பாஜக கூட்டணியில் பாமக சென்றது என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல். நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
சமூக நீதிக்காக என்ன செய்தீர்கள்?:சமூக நீதிக்காக மருத்துவர் ராமதாஸ் 44 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, இன்னாள் முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் நீங்கள் சமூக நீதிக்கு என்ன செய்தீர்கள்?. எடப்பாடி பழனிச்சாமியும், மு.க. ஸ்டாலினும் சமூக நீதிக்காக நீங்க இரண்டு பேரும் என்ன செய்தீர்கள். உங்கள் தலைவர்கள் அதாவது கருணாநிதி மற்றும் ஜெயலலிதா செய்ததை விட்டுவிடுங்கள்.