திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் புதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மைதீன் வீட்டில் நேற்றிரவு (டிசம்பர் 17) 11:15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடம் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினரிடம், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுகதவு மற்றும் ஜன்னலில் அரிவாளால் கொத்தியதாகவும், தான் கதவைத் திறக்காத காரணத்தினால் ஆத்திரத்தில் அக்கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர் எனவும் மைதீன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சேதமடைந்த கதவை சோதனை செய்துவிட்டு, பெட்ரோல் குண்டு வீசிய தடையங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் சிக்கிய சிசிடிவி பதிவு காட்சிகளின்படி, அப்பகுதியில் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த மசூது என்பவரை வழிமறித்து கால் மற்றும் முதுகில் அதே கும்பல் அரிவாளால் வெட்டி தப்பியோடி இருப்பது தெரியவந்தது.
இது குறித்த மைதீன் மற்றும் மசூது கொடுத்த புகாரின் பேரில், பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 8 பேரைத் தேடி வருகின்றனர்.