தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி தென் டேனிலா (23) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 23ஆம் தேதி தருவைகுளத்தைச் சேர்ந்த மிக்கேல் ஆல்வின் (20), டேனியல் சஞ்சய் (22), சில்வர்ஸ்டார் (20), மிக்கேல் டேனியல் ராஜ் (25), மரியநாதன் (45), கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த இன்னாசி (47), விஜயகுமார் (43), கிழ அரசரடி பகுதியைச் சேர்ந்த அழகுராஜா (28), வேம்பார் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய நார்பெட் (19), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த ராசின் (45) ஆகிய 10 பேரும் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
அதேபோல, தருவைகுளத்தைச் சேர்ந்த ஆர்.அந்தோணி மகாராஜா (45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (36), சுப்பிரமணியன் (63), ஸ்டீபன் (47), அருண் (19), அந்தோணி ததிஷ் (20), ஜார்ஜ் ராமு (20), சோலை முத்து (41), ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இதயகுமார் (30), நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (52), பெரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (39), பாறைகுளம் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் (20) உட்பட 12 பேரும் கடந்த 23ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு விசைப்படகுகளும் நேற்று (ஆக.5) மதியம் இலங்கை நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடல் பகுதியில் சென்ற போது சீரற்ற வானிலை கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடல் பகுதியில் சென்றதாகவும், அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளுடன் சேர்த்து அதில் இருந்த 22 மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும், 22 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டுமென மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆழ்கடல் விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் புகழ் செல்வமணி கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கிராமத்தில் இருந்து 2 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்று மதியம் இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களை கைது செய்தது மட்டுமின்றி, படகுகளையும் பறிமுதல் செய்தனர்.