ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள மாக்கம்பாளையம் என்ற மலைக்கிராமத்துக்குத் தினந்தோறும் இரு முறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சேவை, வருவாய் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ் போன்ற பணிகளுக்கும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதற்கும், சத்தியமங்கலம் செல்வதற்கும் இந்த பேருந்தில் பயணிக்கின்றனர்.
மாக்கம்பாளையம் கிராமத்திற்கு இந்த பேருந்தைத் தவிர வேறு தனியார் பேருந்துகள் இல்லாததால், இந்த அரசு பேருந்தை நம்பியே மக்கள் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாகக் கைக்குழந்தையுடன் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயணிக்கும் இந்த அரசு பேருந்தில் இருக்கை, கைப்பிடி கம்பி, தரைதளம் மற்றும் மேற்கூரை என அனைத்தும் சேதமடைந்துள்ளது. கைப்பிடி கம்பியின் நட்டுகள் இல்லாமலும் உள்ளது.
குறிப்பாகப் பேருந்தில் நின்றபடி பயணிக்கும் மக்கள், பேருந்தின் கைப்பிடி பிடித்தால், கைப்பிடி தனியாகக் கழன்று வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். மேலும், பேருந்து மேற்கூரையின் தகரம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. மழை பெய்யும் போது, மழை நீர் பேருந்தினுள் புகுவதால், பயணிகள் பேருந்துக்குள் இருந்து குடை பிடிக்கும் நிலை உள்ளது. வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வலையால், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர்.
பேருந்து இருக்கைகள் அமரமுடியாத நிலையில், கயிறு போட்டுக் கட்டியுள்ளனர். மேலும், பல இருக்கையில் சேதமடைந்த நிலையில் உள்ளன. பேருந்து படிக்கட்டின் பக்கவாட்டில் உள்ள கழன்று போன தகரம் பயணிகளின் காலை பதம்பார்க்கிறது. இது மட்டுமில்லாமல், பேருந்தினுள் ஓட்டுநர் பார்க்கும் வகையில் இருக்கும் கண்ணாடியையும் இப்பேருந்தில் காணவில்லை.
இது ஒரே பேருந்து என்பதால் பள்ளி மற்றும் வேலை நாட்களில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். பயணிகள் அதிகளவில் பயணிக்கக்கூடிய, மலைக் கிராமங்களுக்குச் செல்லக்கூடிய அரசு பேருந்து இவ்வாறு இருப்பது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. எனவே, அச்சமின்றி பயணிக்கும் வகையில் புதியதாகப் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.