சென்னை:பல்லாவரம் பகுதியில் 30 வயதாகும் மகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மூங்கில் ஏரி, சுவாமிநாத நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை(62). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு ஈஸ்வரி(52) என்ற நபருடன் திருமணமாகி 30 வயதில் கீர்த்தனா என்ற மகள் உள்ளார். தற்போது கீர்த்தனா அயர்லாந்து நாட்டில் படித்துக் கொண்டே, அங்கு வேலை பார்த்து வருகிறார்.
கீர்த்தனாவுக்கு முப்பது வயதாகும் நிலையில், அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்ததாகவும், அதற்கு கீர்த்தனாவோ செவி சாய்க்காமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த மகளிடம், செல்லதுரை ஈஸ்வரி தம்பதியினர் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு கீர்த்தனா எந்த சம்மதமும் தெரிவிக்காததால், மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மகளுக்குத் திருமணம் முடியவில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, காலையில் வெகுநேரமாகியும் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராத காரணத்தால் அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டிப்பார்த்துள்ளனர்.