ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் மாசி மகம் திருவிழாவில், பொங்கல் வைத்து கிடா வெட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி இன்று (பிப்.25) ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 50 ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில், ஒரே நேரத்தில் அதிகளவிலான மக்கள் காட்டுக்குள் வந்து செல்வதால், வனத்தின் சூழல் மற்றும் வனவிலங்குகளின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், கோயிலுக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த, திருவிழா நடைபெறும் மூன்று நாட்களுக்கு நாளொன்றுக்கு நூறு வாகனங்கள் மட்டும் அனுமதி என்ற அடிப்படையில் 3 நாட்களுக்கு 300 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, முதல் இரண்டு நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், நாளொன்றுக்கு 100 வாகனங்கள் வீதம் 200 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலை துறை சார்பில், வன சோதனைச் சாவடி பகுதியில் இருந்து கோயிலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து ஆதி கருவண்ணராயரை வழிபட்டனர்.