தமிழ்நாடு

tamil nadu

தீவிரமடையும் பறக்கும் படையினரின் சோதனை.. தமிழ்நாடு முழுவதும் ரூ.6.84 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 10:44 PM IST

Raid On Lok Sabha Election: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று காலை வரையில் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Raid On Lok Sabha Election
Raid On Lok Sabha Election

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை மார்ச் 16 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்தின் மாலை 3 மணி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக சோதனைகள் மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை என்ற கணக்கில், தமிழ்நாடு முழுவதுமாக 702 பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரொக்கம், சேலைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், வீட்டுமனை பத்திரப் பதிவிற்காக வருகை தந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரிடமிருந்து ரூ.5 லட்சம் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, செட்டியப்பனூர் பகுதியில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 60 புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அவற்றை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே கொசவன்பாளையம் பகுதியில், திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி:நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தமிழ்நாடு - கர்நாடகா சோதனைச் சாவடி அடுத்துள்ள கார்குடி என்ற இடத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 9 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்:பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் கண்டெய்னர் லாரி ஒன்றில், ரூ.300 மதிப்புள்ள 150 சேலைகள் மற்றும் ரூ.250 மதிப்புள்ள 105 குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் ஆகியவை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதால், அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கிருபாநிதி என்பவர் கொண்டு சென்ற 81 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிருபாநிதி, கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு கடன் அளிக்க ஆவணங்கள் இன்றி இந்த பணத்தைக் கொண்டு சென்றதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம்: புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஊழியர்கள், விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து, விழுப்புரம் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் இன்று காலை வரையில் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:“வேட்பாளருக்கு இருக்கும் நோய்களை பற்றி தெரிவிக்க வற்புறுத்த முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details