தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொகுதிக்கு 10 பேர்.. ஈபிஎஸ்சிடம் 6 முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.. அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கூறுவது என்ன? - AIADMK LEADERS REUNITE

AIADMK LEADERS REUNITE: ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருவதாகவும், நால்வரும் அமர்ந்து பேசும் காலம் நெருங்கி வருவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

OPS,SASIKALA,TTV,EPS
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 7:29 PM IST

Updated : Aug 13, 2024, 7:43 PM IST

சென்னை:அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 'அதிமுக ஒருங்கிணைப்பு குழு' எனும் பெயரில் செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்புக் குழு பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விதமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக தலா 10 பொறுப்பாளர்களை தங்களது ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நியமித்துள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி எழும்பூர் சிராஜ் மகாலில் தங்களது ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்களுக்கு ஜேசிடி பிரபாகர் அளித்த பேட்டியில், “4 பிரிவுகளாக தெரிகிற பிரிவை ஒன்றாக இணைக்க பாடுபடுகிறோம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் என நால்வருக்கும் இணைப்பு குறித்து கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழகம் முழுவதும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது.

4 பிரிவில் யாரையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு முன்பு ஓபிஎஸ் மருமகன் வீட்டில் நாங்கள் ஆலோசித்தோம். வழிகாட்டுதல் குழு அமைத்து அதன் முடிவுக்கு தான் கட்டுப்பட இருப்பதாக ஓபிஎஸ் எங்களிடம் கூறினார். ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு வழிகாட்டுதல் குழு அமைப்பது குறித்த ஓபிஎஸ்-ன் முடிவை நாங்கள் வேண்டாம் என்று கூறினோம்.

4 பேரும் அமர்ந்து பேச வேண்டும். பாஜகவுடன் தான் தொடர்ந்து கூட்டணி என்ற ஓபிஎஸ் முடிவு இப்போது எங்களுக்கு ஏற்புடையது அல்ல, பொதுக்குழு, செயற்குழுவின் மூலமே கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட வேண்டும். தனிக்கட்சி நடத்துவதால் டிடிவி தினகரன் இணைப்புக்கு சாத்தியமில்லை என்று கூறினாலும், அவர்களுடன் கூட்டணி அமைத்து அதிமுக வாக்குகள் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விரைவில் பேச்சுவார்த்தை: 4 பேரும் அமர்ந்து பேசி இணைப்புக்கான தேதியை தீர்மானிக்க வேண்டும். 4 பேரும் அமர்ந்து பேசும் காலக்கட்டம் நெருங்கி வருகிறது. வைகோ தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறிய கருணாநிதி, பின்னர் தேவை என்றவுடன் வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியைக் காப்பாற்ற நினைப்பவர்கள்தான் தலைவர்கள். இணைப்பு என்று வந்தால் கோபத்தை மறந்துவிட வேண்டும். அதிமுகவை அழிக்கப் போவதாக அண்ணாமலை தேவையில்லாமல் பேச வேண்டாம்" என்றார்.

அதனைத் தொடர்ந்து கே.சி.பழனிசாமி கூறுகையில், "அதிமுக தொண்டர்கள் செயலிழந்து நிற்கின்றனர். நடுநிலையாளர் வாக்குகளும் அதிமுகவிற்கு வருவதில்லை. இணைப்புக்கான முயற்சியில் ஈடுபடும் எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மேல்மட்ட தலைவர்களாக இருப்பவர்களுக்கு பதவி ஆசை மட்டுமே இருக்கிறது. வாக்கு வங்கி குறைந்தது குறித்து அவர்களுக்கு கவலை இல்லை.

ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை வளர்க்க நினைப்பது தவறில்லை. ஆனால் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அண்ணாமலையின் விருப்பமாக உள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தற்போது அமைத்துள்ளோம். இரண்டரை லட்சம் தொண்டர்கள் இதற்கு தயாராக உள்ளனர்.

அதிமுக வீழ்ச்சி? அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் வெளியில் தெரியாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்களின் அழுத்தத்தால் 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தி பேசி வருகின்றனர். எங்கள் கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை.

ஆனால், அதன் அழுத்தத்தால் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் குறித்து தற்போது வெளிப்படையாக கூற முடியாது. பாஜக போன்ற மதவாத, இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்குள் நுழைய விட்டுவிடக் கூடாது. அதிமுக வீழ்ச்சி அதற்கு இடம் தந்துவிடக் கூடாது" என்றார்.

பின்னர், புகழேந்தி பேசுகையில், "எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசிய தா.மோ.அன்பரசனை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும். கருணாநிதி இறந்துவிட்டார். எனவே, அவரை நாங்கள் திட்டமாட்டோம். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தவறாக பேசினால் எந்த நிலைக்குச் சென்றும் போராடுவோம். அன்பரசன் மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழியே ஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டினார்.

அதிமுக 3வது இடத்துக்கு போய் விட்டதை பார்த்துவிட்டு, இனி 4 வது இடத்துக்கு போய் விடும் என அண்ணாமலை கூறுகிறார். எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் பொதுச் செயலாளர் ஆகவே முடியாது. வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் சிராஜ் மகாலில் எங்களது ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: "முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விஷமப் பிரச்சாரம் என்பது கண்டனத்திற்குரியது" - ஓபிஎஸ் தாக்கு! - OPS about mullai periyar dam

Last Updated : Aug 13, 2024, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details