சென்னை: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கிழக்கு ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் சென்னை சிட்லபாக்கத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில், சிட்லபாக்கம் சர்வமங்கல நகர் இரண்டாவது பிரதான சாலை வழியாகத் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையைக் கவனிக்காமல், வாகனத்தில் வேகமாகச் சென்றதால் நிலை தடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விழுந்தனர். இதில் சிறுவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மின் கம்பத்தின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த கோவிந்தராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.