தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை வெள்ளப்பாதிப்புக்கு காரணம் என்ன? நீரியல் ஆய்வாளர் சொல்லும் தீர்வு இதுதான்! - ONE DAY RAIN

மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. மக்களை வேதனைக்கு ஆளாக்கிய மழை வெள்ளப்பாதிப்பில் இருந்து மதுரையை எவ்வாறு பாதுகாப்பது?

மதுரையை சூழ்ந்த மழை நீர்
மதுரையை சூழ்ந்த மழை நீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 7:10 AM IST

மதுரை:மதுரை நகரில் கடந்த 25ஆம் தேதி பிற்பகல் தொடங்கி இரவு வரை நீடித்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. மக்களை வேதனைக்கு ஆளாக்கிய மழை வெள்ளப்பாதிப்பில் இருந்து மதுரையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

மதுரையில் கடந்த 25ஆம் தேதி சராசரியாக 10 செமீ மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இந்த சிறிய மழைக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு கடும் பாதிப்பை மதுரை எதிர் கொண்டுள்ளது. மதுரையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இதற்கு முன் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கும், மதுரை மாநகராட்சிக்கும் அறிக்கைகள் அளித்த குழுவில் இடம் பெற்றவர்தான் நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீரியல் சார்ந்த பணிகளில் அனுபவம் கொண்டவர். நீரின் முக்கியத்துவம் குறித்து ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல்களை எழுதியுள்ளார். மதுரை மக்களை மிரள செய்த தற்போதைய மழைக்கான காரணம் மற்றும் மதுரையை மழை பாதிப்பில் இருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து ஈடிவிபாரத் தமிழ்நாடு சார்பாக கேள்விகளை முன் வைத்தோம்.

மாடக்குளக்கீழ் மதுரை: "மதுரையில் அமைந்துள்ள நீர்நிலைகளுள் மாடக்குளம், வண்டியூர், தென்கால், செல்லூர் கண்மாய்கள் மிகப் பழமை வாய்ந்தவையாகும். மதுரையின் பெருமையைக் கூறும் பல்வேறு கல்வெட்டுகள் 'மாடக்குளக்கீழ் மதுரை' என்றே பதிவு செய்துள்ளன. மதுரை நகரானது சாத்தையாறு, வைகை மற்றும் குண்டாறு வடிநிலப்பகுதிகளைக் கொண்ட நகரமாகும். வைகையாறு வட மற்றும் தென்புறமாக மதுரையை பிரித்து நடுவில் ஓடுகிறது.

இதையும் படிங்க :"மழை தொடர்ந்தால் நாங்கள் அவ்வளவு தான்" - குமுறும் மதுரை மக்கள்!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏறக்குறைய 140 நீர்நிலைகள் உள்ளன. இவை கண்மாய்கள், குளங்கள், கோவில் குளங்கள் என வகைப்படுத்தலாம். இவை தவிர, நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாய்கள், வெளியேறும் போக்குக் கால்வாய்கள் ஆகியவை உள்ளன. சாலைகளில் வழியும் மழைநீரைக் கொண்டு செல்லும் வாய்க்கால் கட்டமைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

நீரியல் ஆய்வாளர் ஜோ.கனகவல்லி (Credits - ETV Bharat Tamil Nadu)

வடக்கு, தெற்கில் 14 கால்வாய்கள்: வைகையின் வட மற்றும் தென் புறங்களில் மழை நீரைக் கொண்டு செல்லும் 14 முக்கியக் கால்வாய்கள் வைகையாறு, கிருதுமால் நதி மட்டுமன்றி கண்மாய்கள், குளங்களில் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் மொத்த நீளம் ஏறக்குறைய 45 கி.மீ. ஆகும். மேற்கண்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் மதுரையில் சிறு மழைக்கே பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணமாகும். மேலும் பெரும்பாலான நீர் நிலைகள் குப்பை, கூளங்களால் நிறைந்து காணப்படுகின்றன. சில நீர்நிலைகள் முற்றிலுமாக தூர்க்கப்பட்டு வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. வெள்ளம் தாங்கிகளாகப் பயன்பட்ட கண்மாய்கள் மிகக் கடுமையான சூழல்கேட்டிற்கு ஆளாக்கப்பட்டுள்ளன. ஆகையால் நகருக்குள் பொழிகின்ற மழைநீரை இந்த கால்வாய்கள் வாயிலாகக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

30 சதவிகிதம் ஆக்கிரமிப்பு:எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுத்து பாதுகாப்பதும், பராமரிப்பதும்தான் இன்றைய அவசரத் தேவை. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. வெள்ளநீரைத் தாங்கிச் செல்வதற்கான கட்டமைப்புகள் சிதைந்துள்ளன. மழை நீரைக் கொண்டு செல்லும் வரத்து மற்றும் போக்குக் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி பராமரிப்பதே நிரந்தரத் தீர்வுக்கான வழி. மதுரையிலுள்ள கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஏறக்குறைய 30 சதவிகிதத்திற்கும் மேல் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளன. இந்த நிலை தொடருமானால் வெள்ளப்பாதிப்புகளிலிருந்து மதுரை மாநகரை ஒரு போதும் மீட்க முடியாது.

ஒருங்கிணைந்த முயற்சி: கடந்த 2007-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று நாங்கள் குறிப்பிட்ட அதே பகுதிகள்தான் தற்போதும் பாதிப்படைந்துள்ளன. காலங்கள் மாறினாலும் அந்தப் பகுதிகளின் நிலை மாறவேயில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றின் தேவை, அவை நீடித்திருக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து அந்தந்தப் பகுதி மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசோடு இணைந்து மக்களும், தன்னார்வ நிறுவனங்களும், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் எல்லோரும் இணைந்து நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவது காலத்தின் கட்டாயம்' என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்


ABOUT THE AUTHOR

...view details