தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊதுகுழல்" - ஓபிஎஸ் கடும் விமர்சனம் - எடப்பாடி திமுகவின் ஊதுகுழல்

OPS Criticize EPS: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து, திமுகவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

OPS Criticize EPS
ஓபிஎஸ் விமர்சனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 11:33 AM IST

சென்னை:இது தொடர்பாகமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்" என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும் என்றும், எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்றும் தனது X வலைதளப்பக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவிட்டிருந்தார்.

இந்தக் கொள்கையிலிருந்து தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து பிப்.14ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின்மீது பேசிய என்.தளவாய் சுந்தரம், "2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2034 ஆம் ஆண்டில் முடிவடையும், 10 ஆண்டுகளுக்குள்ளான கிட்டத்தட்ட 10 கோரிக்கைகள் அளித்திருக்கிறோம்.

Committee அவற்றை பரிசீலனை செய்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, அதனை மத்திய அரசிற்கு அனுப்பி, அதன் மூலமான எங்களுடைய சாதகங்களையும், பாதகங்களையும் பார்க்கின்ற நிலை வரும்பொழுது, நாங்கள் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்கின்ற சூழ்நிலை உருவாகும்பொழுது, குழு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமானால், நாங்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம்" என்று அரைகுறையாக, மழுப்பலாக குழப்பி இருக்கிறார்.

27 அமாவாசை என்று 2022-ல் கூறியது இப்போது 2034க்கு சென்றுவிட்டது. இது மட்டுமல்லாமல், இந்தத் தீர்மானம் அதிமுகவின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, திமுகவுடன் கைகோர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

எந்த திமுக என்கிற தீயசக்தியை எதிர்த்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கினாரோ, எந்தத் தீயசக்தியை எதிர்த்து புரட்சித் தலைவி அம்மா கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, திமுகவுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.

"அஇஅதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஓர் இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016ஆம் ஆண்டு முழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா.

இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித்தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும்" என கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்; பிப்.18-இல் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

ABOUT THE AUTHOR

...view details