நாதக வேட்பாளர் காளியம்மாள் பேட்டி தஞ்சாவூர்:நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள காளியம்மாள், நேற்று (மார்ச் 2) இராஜராஜ சோழனின் நினைவிடமாகக் கருதப்படும் கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுர் ஓடைத்தோப்பு பகுதியில் வழிபட்டு, கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், "மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் காணும் நான், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தல் பரப்புரை பயணத்தைத் தொடங்குகிறேன்.
உலகில் முக்கால் பாகத்தை கட்டியாண்ட மன்னனின் நினைவிடத்தைப் பாருங்கள் எப்படியிருக்கிறது? அவர் தமிழ் மன்னன் ஆனதால், அவருக்கு மணிமண்டபம் கட்ட முடியாத சூழல். அதே நேரத்தில் நேற்றும் இன்றும் வந்தவர்களுக்கு எல்லாம் ரூ.80 கோடியில் பேனா, ரூ.900 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி பொருளாதார ரீதியில், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய தொகுதி. ஏற்கனவே, இத்தொகுதியில் எம்பிக்களாக இருந்தோர் அனைவரும் வாக்கிற்குப் பணம் தந்துவிட்டு வந்து போனார்கள் என்ற நிலைதான்.
ஆனால் தொகுதியின் நிலை, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் காகித ஆலை, சர்க்கரை ஆலை, பஞ்சு ஆலை, பால்பண்ணை ஆகியவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை. சிறுதானியம் விளைவித்தல் குறைந்து விட்டது; விவசாயமும் இங்கு தொய்வுண்டு போய்விட்டது.
மீன்பிடி துறைமுகம் கேட்டால், வர்த்தக துறைமுகம் அமைக்க முனைப்பு காட்டுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும், ராஜராஜ சோழனுக்கு இங்குப் பெரிய மண்டபம் உருவாக்கி, இப்பகுதியில் அகழ்வாராய்ச்சியும் மேற்கொள்வோம்.
பல நல்ல நீதிபதிகள் இருந்தபோதும், சிலர் ஜோசியர்களைப் போல கட்சி சின்னம், ராசி குறித்ததெல்லாம் பேசுகிறார்கள். இது எங்களுக்கு மனவருத்தத்தைத் தருகிறது. தமிழகத்தில் வாக்கிற்குப் பணம் கொடுக்காமல் 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி, 2வது அல்லது முதலாவது இடத்திற்கு வந்து விடக்கூடாது என்ற நோக்கில் அதன் சின்னத்தை முடக்கித் தேர்தல் பரப்புரையில் எங்களுக்கு நெருக்கடி தர முயல்கிறார்கள்.
இதுவரை நாடாளுமன்றம், சட்டமன்றம், கிராமப்புற உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் என 3 முதல் 6 தேர்தல்களைக் களம் கண்டு 6.7 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களுடைய 'கரும்பு விவசாயி' சின்னம் மாற்றப்பட்டு புதிய சின்னம் வழங்கினாலும், அதனை இரண்டே மணிநேரத்தில் பரப்பிவிடும் வல்லமை எங்களிடம் உள்ளது" எனத் தெரிவித்தார். பின்னர் அவர் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உடையாளுர், நாதன்கோயில், தாராசுரம், கும்பகோணம் மாநகரம் ஆகியவற்றில் தனது நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!