சென்னை:கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில், லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் ஆகியவற்றை கழற்றியதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரயிலை தகர்க்க சதி என்ற இந்திய ரயில்வேச் சட்டத்தின் 150-வது பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கவரைப்பேட்டையில், கடந்த அக்.11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கவரைப்பேட்டை ரயில் விபத்து.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
லோகோ பைலட், தொழில்நுட்பப் பிரிவு, சிக்னல் பிரிவு, தண்டவாள பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரயில் மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைனில் மாறிச் சென்றதால், ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு, ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கவனக்குறைவாக செயல்படுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், காயங்கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வாறு ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போல்ட், நட்டுகள் திட்டமிட்டு கழட்டப்பட்டுள்ளதால் இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரயில்வே சட்டத்தின் 150வது பாதுகாப்பு சட்டப் பிரிவு (ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) இவ்வழக்கில் ரயில்வே போலீசார் சேர்த்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்