தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தரகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதா? - அதிகாரிகளைச் சரமாரியாகக் கேள்வி கேட்ட நெல்லை ஆட்சியர்! - நெல்லை விவசாயிகள்

Nellai Farmers Grievance Meeting: திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் விவசாய நிலங்களில் மணல் படிந்த பகுதிகளை அரசே சீரமைத்துத் தருவதாகவும் மார்ச் மாதம் அதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகத் திருநெல்வேலி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

nellai-farmers-grievance-redressal-meeting-was-held-under-the-leadership-of-district-collector-karthikeyan
இடைத்தரகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதா? - அதிகாரிகளைச் சரமாரியாகக் கேள்வி கேட்ட நெல்லை ஆட்சியர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:17 AM IST

இடைத்தரகர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு வேடிக்கை பார்ப்பதா? - நெல்லை மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் இன்று (ஜன.19) நடைபெற்றது. நெல்லையில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தைத் தொடர்ந்து நடைபெறும் முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பதால் வெள்ள பாதிப்பு குறித்து முறையிட விவசாயிகள் மிகுந்த ஆர்வத்தோடு இதில் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவில் விட 413.4% மழை கூடுதலாகப் பெய்துள்ளது. டிசம்பர் மாதம் வரை 1243.12 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த பெருமழையால் 2617 .06 ஹெக்டேர் நெல் பயிர்கள், 4711.03 ஹெக்டேர் பயிர் வகைகள் உள்பட மொத்தம் 19,306.76 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும் 192 குளங்கள் 142 கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட குளங்களைச் சரிசெய்ய 19 கோடி ரூபாய் மதிப்பில் தற்காலிக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசினர்.

அப்போது பேசிய விவசாயிகள், அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளைச் சரிவரக் கணக்கெடுக்கவில்லை என்றும் பல இடங்களில் மணல் திட்டுகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

அப்போது பேசிய ஆட்சியர் கார்த்திகேயன், விவசாய நிலங்களில் மணல் படிந்த பகுதிகளை அரசே சீரமைத்துத் தருவதாக உறுதி அளித்துள்ளோம் வரும் மார்ச் மாதம் இந்த பணிகள் நடைபெறும் என பதில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய விவசாயிகள் பாபநாசம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மறுப்பதாகக் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக ஆக்கிரமிப்பை உடனே அப்புறப்படுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இடைத்தரகர்கள் குறிப்பிட்ட இருவருக்குப் பணத்தைக் கொடுத்து விட்டுத் திரிவார்கள் அதற்காக நீங்கள் யோசிக்கக் கூடாது இடைத்தரகர்களுக்குப் பயப்படக்கூடாது காவல்துறையிடம் கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் தாமிரபரணி நதி இறங்கி வரும் இடத்தில் ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது, எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அதிகாரி ஒருவர், அடுத்த மாதம் நிச்சயம் அகற்றி விடுவோம் என தெரிவித்தார். உடனே ஆட்சியர் கார்த்திகேயன் ஏன் அடுத்த மாதம் தான் நல்ல நாள் இருக்கிறதா இந்த மாதம் நல்ல நாள் இல்லையா இந்த மாதம் தை மாதம் நல்ல நாள் தானே என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளுக்குச் சீல் வைத்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பெருவுடையார், கடந்த மாதம் பெய்த பெரும் மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் தரும் இழப்பீடு அன்றாட செலவுக்குத் தான் சரிவரும் எனவே இரண்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்காவது மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் அரசு ஓய்வூதியம் தர வேண்டும் வெள்ளத்தால் உயிரிழந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்படக் கூட்டத்திலிருந்து அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், ஏற்கனவே வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களைக் கட்ட முடியாத நிலையில் தற்போது கூடுதலாக வட்டி இல்லாமல் கடன் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே ஏற்கனவே வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு புதிய கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பெருவுடையார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த மாதம் பெய்த கனமழையால் நெல்லை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் விவசாய நிலங்களில் மணல் படிந்து கடுமையாகச் சேதம் ஏற்பட்டுள்ளது விவசாயியை வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இரண்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதம் 10,000 ரூபாய் ஒரு வருடத்திற்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் அரசு இந்த கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்துப் போராடுவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்டா மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details