தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில், பாலித்தீன் பையில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக கடலோரக் காவல் குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், பட்டுக்கோட்டை கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர்கள் பிச்சை வேம்பு, ராஜசேகர், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் கடற்கரை பகுதிக்குச் சென்று பார்சலைக் கைப்பற்றினர்.
அதை போலீசார் மற்றும் அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அது போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. எந்த வகையான போதைப் பொருள் என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில், பார்சலில் இருந்தது மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. சுமார் 950 கிராம் எடை இருந்த அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூபாய் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து, போதைப் பொருளை கடற்கரையில் பதுக்கி வைத்தது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யார் கடத்தி வந்தார்கள், இலங்கையிலிருந்து படகு மூலம் போதைப் பொருளைக் கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்தனரா, எங்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.