தேனி: தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாடோடிகளாக வாழும் இவர்கள் தங்களிடம் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், அரசு வீடு வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இம்மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பிரியா கூறுகையில், "25 ஆண்டுகளாக தேனியில் உள்ள தென்றல் நகர் பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம்.
தற்போது, அம்மாபட்டி பகுதியில் காலனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் எங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டி கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைந்து வருகிறோம். ஆனால், இது நாள் வரை சரியான் தீர்வு கிடைக்கவில்லை.
அரசு தரப்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் அனைத்தும் இருந்தும் எங்களுக்கு வீடு ஒதுக்கப்படுவதில்லை. தற்போது, இது குறித்து அதிகாரிகளிடம் முறையிடும் போது ஆவணங்கள் சரியாக இருந்தால் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினர். எங்களிடம் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக உள்ளது.
இது குறித்து முறையிட இன்று தாசில்தார் அலுவலகம முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று தாசில்தார் வரவில்லை என தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் நாளை நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.