கரூர்: கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவரது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானது என மேல கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இவ்வாறு அளித்த புகாரைப் பெற்ற சிபிசிஐடி போலீசார், கடந்த ஜூன் 18ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், ஈரோடு சித்தார்த்தன், காஞ்சிபுரம் ரகு, கரூர் வழக்கறிஞர் மாரப்பன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 13 பேர் தலைமறைவாக இருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே, கேரளாவில் பதுங்கி இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன் ஆகியோர் கடந்த ஜூலை 16ஆம் தேதி தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதித்துறை எண் 1-ல் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், கடந்த ஜூலை 30ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தினந்தோறும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார். அதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில், இன்று வரை தினம் தோறும் ஆஜராகி கையொப்பமிட்டு வருகிறார்.