தருமபுரி: நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், கலந்து கொண்டு பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், "கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. மாநிலத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும் ஒரு நடுநிலைப்பள்ளி, ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒவ்வொரு 7 கிலோ மீட்டருக்கும் ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவ, மாணவியர்களின் மொத்த சதவீதம் 52ஆக எட்டியுள்ளது. இந்த இலக்கு தேசிய சராசரியை விட மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் இப்போது எட்டியுள்ள இலக்கை இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என இலக்கு வகுத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு இப்போதே எட்டி சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனைக்கு காரணம் திராவிட கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்கள் கொண்ட கொள்கைதான். 1920ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சென்னை மாநகராட்சி பள்ளிக்கான மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னாளில் காமராஜர் என்ற மாபெரும் தலைவரால் அது முழுமையாக கொண்டு வரப்பட்டது.
மாணவர்களை கல்விக்காக பள்ளிக்கு அழைத்து வந்த பல திட்டங்கள் திராவிட அரசியலில் உள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் முன்னேறிய திட்டங்களில் முதன்மையாக தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டமாகும். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் மற்றொரு திட்டமும் உள்ளது.