சென்னை:ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வசீகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எம்பி துரை வைகோ பேசியதாவது, “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனநாயகத்திற்கு விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் முதலில் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் பெயில் கொடுக்கும் என்று தெரிந்தும், சிபிஐ மூலம் மறுபடியும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியை சட்டவிரோதப் போக்கில் முடக்கி விடலாம் என்று மோடி ஆட்சி நினைக்கிறது. கருணாநிதியின் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு தான் வெளியிட முடியும். தனிப்பட்ட முறையில் வெளியிட முடியாது. இதில் நான் அரசியல் பார்க்கவில்லை” என்றார்.